Song of Solomon 2

1நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன். 2முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ, அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்.

3காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன், அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது. 4என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.

5திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன். 6அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.

7எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும், எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

8இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார். 9என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று சன்னல் வழியாகப் பார்த்து, தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

10என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா. 11இதோ, மழைக்காலம் சென்றது, மழைபெய்து ஓய்ந்தது.

12பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடும் காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. 13அத்திமரம் காய்காய்த்தது; திராட்சைக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது; என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! நீ எழுந்து வா.

14கன்மலையின் வெடிப்புகளிலும், மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார்.

15திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சைத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே.

16என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.

17

Copyright information for TamULB